×

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

உடுமலை:  திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அமணலிங்கேசுவரவர் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு மேல் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் அடர் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.  உடுமலை வனச்சரகத்தில்  உள்ள இந்த அருவிக்கு கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலையாறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி உள்ளிட்ட ஆறுகள் நீராதாரமாக உள்ளது. மலை பகுதியில் மழை பெய்யும் போது, சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த நீர் பஞ்சலிங்க அருவியில் விழுந்து பாலாற்றில் சென்று திருமூர்த்தி அணையில் கலக்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து அருவி மற்றும் பாலாற்றில் குளித்து மகிழ்வார்கள்.

ஆனால், மழை காலங்களில் இந்த அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், அப்போது பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்படும். தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது, மலை பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அமணலிங்கேசுவரவர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Thirumurthymalai Panchalinga Falls , Thirumurthymalai Flooding at Panchalinga Falls
× RELATED திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில்...