ஆவணி மாதம் முதல் ஞாயிறு மகா மாரியம்மன் கோயில் வாசலில் பக்தர்கள் தரிசனம்: கொரோனா நடவடிக்கையால் மக்கள் ஏமாற்றம்

வலங்கைமான்: தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க வாரத்தில் கடைசி மூன்று நாட்கள் கோயில் மூடப்பட்டுள்ள நிலையில் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி முதல்ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிக பக்தர்கள் கோயிலின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடை காவடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோயில் மகாமாரியம்மன் குழந்தை வரம், மாங்கல்ய பாக்கியம், திருமண தடை நீக்கும், நோய் தீர்க்கும் அம்மன், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் உயிர் காக்கும் அம்மன் என பக்தர்களுக்கு குறிப்பாக பெண்கள் வேண்டும் வரம் அளிக்கும் தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக கோயில் மூடப்பட்டிருந்த நிலையில் நாள்தோறும் பொதுமக்கள் அனுமதியின்றி அறநிலையத் துறையினர் மூலம் 6 கால பூஜைகள் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது. அதனை அடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கோயில் திறக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதிக்கப் படவில்லை.இந்நிலையில் தமிழக அரசு வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் பக்தர்களை கோயிலுக்கு அனுமதிக்காமல் மூடுவதற்கு உத்தரவிட்டது. அதனை அடுத்து வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் வாரத்தின் இறுதி நாளான நேற்று மூடப்பட்டது.

ஆண்டுதோறும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி உள்ளிட்டவைகளில் எடுத்து வந்து பக்தர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கோயில் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் கோவிலின் வெளிப்புற வாசலிலேயே தீபம் ஏற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் ஆவணி கடை ஞாயிறு அன்று கோயிலுக்கு அருகே உள்ள புனித குளத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கடந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடைபெறாத நிலையில்இந்தாண்டு தொற்று பரவலின் காரணமாக தெப்பத்திருவிழா நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>