×

பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக இயங்க தடை: ஞாயிற்றுக்கிழமைகளில் மால்கள், கடைவீதிகளில் கடைகளை திறக்க தடை

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும், மண்டல, கோட்ட அளவில் வணிக சங்க பிரதிநதிகளுடன் மாநகராட்சி கமிஷனர், சப் கலெக்டர், கோட்டாட்சியர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று(23-ம் தேதி) காலை 6 மணி முதல் செப்டம்பர் 6-ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை சுழற்சி முறையிலும், அங்கன்வாடி மையங்களும் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து இயங்க வேண்டும்.

தொடந்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் கல்லூரிகளில் வகுப்புகள், அனைத்து பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழலையர் காப்பகங்கள், நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சி பெறுபவர்களுடனும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.டி நிறுவனம் நூறு சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.  அனைத்து கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம். தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கவும், தியேட்டர் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதை தியேட்டர் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7-வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டோரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய பகுதிகள் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, இப்பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மற்றும் மால்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மாட்டு சந்தை 25-ம் தேதி முதல் தற்காலிகமாக இயங்க தடைவிதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகம், அனைத்து பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள- தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவைக்குள் விமானம், ரயில், சோதனைச்சாவடி வழியாக வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி.சி.ஆர்., டெஸ்ட் செய்து கொரோனா நெகடிவ் சான்று அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு தவனைகள் செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Tags : Pollachi , Pollachi cattle market temporarily closed: Malls and shops closed on Sundays
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!