தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்!: ஒன்றிய அரசின் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை வியாபாரிகள் பகுதிநேர கடையடைப்பு போராட்டம்..!!

ஈரோடு: நகைகளில் ஹால்மார்க் முத்திரை இட்டு விற்பனை செய்வது கட்டாயம் என்ற புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தங்க ஆபரண வியாபாரிகள் பகுதிநேரமாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தர நிர்ணயம் ஆணையம் நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை இட்டு விற்பனை செய்வது கட்டாயம் என்ற புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை வழங்கும் வசதி உடைய 256 மாவட்டங்களிலும் இந்த விதிமுறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நகைகளுக்கு தர முத்திரை வழங்கும் மையங்களில் இதற்கான போதிய வசதிகள் இல்லாததால் ஹால்மார்க் முத்திரை பெற பல நாட்கள் காத்திருந்தும் கிடைக்காத நிலை ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து ஒன்றிய அரசின் இந்த புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நகை கடைகள் பகுதிநேரமாக அடைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாநகரில் 200 கடைகளும், மாவட்டம் முழுவதும் 500 நகை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் ஒன்றிய அரசின் புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 750க்கும் மேற்பட்ட நகை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நகை கடைகள் பகுதி நேரமாக அடைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறையால் நகைகள் தேக்கமடைந்து விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதோடு நுகர்வோரின் விவரங்களை அளிக்க வேண்டி இருப்பதால் தனிநபர் ரகசியம் காக்கும் உரிமையும் பறிக்கப்படும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தே காலை 9 மணி முதல் 11:30 வரை நகை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>