தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. மாநில அரசுகள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுதவிர, ஆங்காங்கே முகாம்கள் நடத்தியும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசியை விரைவாக செலுத்தி விட வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்காக உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். அந்த வகையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். சென்னையில் தொடங்கியுள்ள இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 55 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் நாளை முதல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம். வேலைக்குச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>