×

செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வேல்முருகன் எம்.எல்.ஏ கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 24 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இதில் 24 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டண உயர்த்தப்பட்டது. அவை தவிர்த்து,  மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி உள்ளிட்ட 24 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்றது. பொதுமக்கள் பயன்படுத்தும் சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக இருந்தால், அது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகங்களும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இவ்விதிகளை யெல்லாம் மதிக்காமல் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

தற்போது வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு காரணமாக, சரக்கு வாகன வாடகை, ஆம்னி பேருந்து கட்டணம் உள்ளிட்டவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இது மறைமுகமாக அத்தியாவசியப் பொருட் களின் விலையை உயர்த்துவதோடு, விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தும்.

Tags : Velmurugan ,MLA ,Highway Authority , Customs, Highways Authority, Velmurugan MLA
× RELATED சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு