கிரைம் நியூஸ்

சிறுமியிடம் நகை பறித்தவர் கைது: கொளத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் கழுத்தில் கிடந்த ஒரு சவரன் செயின் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அனுசுயா (30) என்பவர் கழுத்தில் கிடந்த ஒரு சவரன் செயினை பறித்து சென்ற திரு.வி.க.நகரை சேர்ந்த அரவிந்தனை (24) போலீசார் கைது செய்தனர்.

போக்சோவில் வாலிபர் கைது: சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த திருப்பதி (19) என்பவர், திருவொற்றியூரில் தங்கி லாரி கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் திருப்பதியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

குடிநீர் வாரிய ஊழியர் தற்கொலை: சென்னை சர்மா நகர், பி.வி.காலனி, சாஸ்திரி நகர், 1வது தெருவை சேர்ந்த குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் பரசுராமன் (40), தீராத வயிற்று வலி காரணமாக, வீட்டின் எதிரே அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் உள்ள வேப்பமரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* அரும்பாக்கம் சக்தி நகரை சேர்ந்த பெயின்டர் வடிவேல் (39), மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* பூந்தமல்லி அம்மா நகரில் தங்கி, தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வினோத் குமார் சைனி (23), நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாவா தயாரித்த இருவர் கைது: ஐயப்பன்தாங்கல், காமாட்சி நகர், 1வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து, மாவா தயாரித்து எழும்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் விற்பனை செய்து வந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த காந்த் குமார் (21), சுதாகர் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து, 19.8 கிலோ மாவா, 60 கிலோ சீவல் பாக்கு, 3.2 கிலோ மாவா தயாரிக்கும் பொருட்கள், 2 கிரைண்டர், 1 எடை மெஷின் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரயில் மோதி அரசு ஊழியர் பலி: திரிசூலம் பகுதியை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் கணேசன் (45), பல்லாவரம் - திரிசூலம் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதி இறந்தார். இதேபோல், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, 56 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை  கடந்தபோது ரயில் மோதி இறந்தார்.

Related Stories:

>