×

புளியந்தோப்பு போல ராமாபுரத்திலும் தரமற்ற கட்டுமான பொருட்களால் உதிரும் அடுக்குமாடி குடியிருப்பு: பொதுமக்கள் அச்சம்

சென்னை: புளியந்தோப்பு சம்பவத்தைபோல் ராமாபுரத்திலும் தரமற்ற கட்டுமான பொருட்களால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கடந்த அதிமுக அரசால் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்த ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர், கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆராய ஐஐடிக்கு பரிந்துரை செய்தனர்.

தொடர்ந்து, தரமற்ற கட்டிட பணி தொடர்பாக 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல இடங்களிலும் இதுபோல் பல கட்டிடங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தை தொடர்ந்து, அவற்றை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், புளியந்தோப்பு சம்பவத்தை போல், ராமாபுரம் பகுதியிலும் தரமற்ற முறையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுவதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ராமாபுரம், பாரதி சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கே.கே.நகர் கோட்டம் சார்பில், ரூ.78.44 கோடியில் 384 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதிப்பிரிவு மூலம் கட்டப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் 2 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இந்த குடியிருப்பு கட்டிடத்தை லேசாக தொட்டாலே, அதன் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன. சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் அக்குடியிருப்பு கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். எனவே, ராமாபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த சம்மந்தப்பட்டத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ஐஐடி குழுவினர் ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Puliyanthoppu ,Ramapuram , Puliyanthoppu, Ramapuram, Non-standard construction materials,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!