×

நீங்கள் 80 வயது கடந்தவரா? கொரோனா தடுப்பூசி வீடு தேடி வரும்: அமைச்சர்கள் கே.என் நேரு, பி.கே.சேகர்பாபு துவக்கி வைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று  தடுப்பூசி போடும் வாகனத்தை அமைச்சர்கள் கே.என் நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். சென்னை மாநகராட்சி ரிப்பன்  மாளிகையில், 382வது சென்னை தினத்தை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட  முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் நடமாடும் வாகன திட்டத்தை நகராட்சி  நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர்  கொடியசைத்து  துவக்கி வைத்தனர்.

இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ஐட்ரீம்ஸ் ஆர்.மூர்த்தி, சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக ஒரு லட்சத்து 60 ஆயிரம்  பேர் உள்ளனர் என்பது கணக்கெடுப்பின்  மூலம் தெரியவந்துள்ளது. அதில், 90 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது,  மீதம் உள்ளவர்களுக்கு இல்லம் தேடி  தடுப்பூசி போடும் வாகனங்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளது.  மேலும் 15 வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது.

தேவைப்பட்டால்  ரோட்டரி கிளப் மூலம் இன்னும் வாகனங்களை அதிகரித்து தடுப்பூசி போடப்படும். மேலும் சென்னையில் இதுவரை மொத்தமாக  36,25,964  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதைப்போன்று 18 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு 10,69,661 தடுப்பூசிகளும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  17,44,781 தடுப்பூசிகளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 8,11,820  தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது என்றனர்.

அடுக்குமாடி ‘வீக்’ ஆக கொரோனா தடுப்பூசியா போட்டோம்?
சென்னையில் கே.பி.பார்க் குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டிருந்த விவகாரம் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் நிருபர்கள் இது குறித்து  கேள்வி எழுப்பினர். அப்ேபாது அமைச்சர் நேரு, கே.பி பார்க் குடியிருப்பில்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களை  தங்க வைத்ததால் தான் கட்டிடம் பலவீனமானதாக  கட்டுமான நிறுவனம் கூறி உள்ளது. அந்த நிறுவனத்திடம் கேட்கிறேன், கொரோனா தடுப்பூசி மக்களுக்கு தானே போட்டோம். கே.பி.பார்க் அடுக்குமாடி கட்டிடத்திலா தடுப்பூசி போடப்பட்டது என்று  எதிர் கேள்வி எழுப்பினார்.

Tags : Corona ,Ministers ,KN Nehru ,BK Sekarbabu Initiative Deposit , Corona Vaccine, Ministers KN Nehru, BK Sekharbabu
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...