×

மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில், திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் அ.முகம்மது ஜான் கடந்த மார்ச் 23ம் தேதி மரணமடைந்தார். மேலும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாகினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தமிழகத்தில் 3 மாநிலங்களவை பதவி காலியானது. இதனால், இந்த 3 இடங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.  3 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை தனித்தனியாக நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர், அ.முகம்மது ஜான் இறந்ததனால் ஏற்பட்ட காலி இடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை(24ம் தேதி) தொடங்க உள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 31ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 1ம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற செப்டம்பர் 3ம் தேதியும் கடைசி நாள் ஆகும். தேவை ஏற்படின் வாக்குப்பதிவு செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2021 செப்டம்பர் 13 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா எம்.பி.ஏ., போட்டியிடுவார் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் உள்ள எம்எல்ஏக்கள் பலத்தால் தற்போது நடைபெற உள்ள மாநிலங்களவை எம்பி பதவியை திமுக போட்டியின்றி கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. இதேபோல இன்னும் 2 மாநிலங்களவை பதவியையும் திமுக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.  திமுகவில் இளைஞர் ஒருவருக்கு மாநிலங்களவை எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  எம்.எம்.அப்துல்லா, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார்.

வாழ்க்கை குறிப்பு
மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக புதுக்கோட்ைடயை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா (46) போட்டியிடுகிறார். எம்பிஏ வரை படித்த இவர், தற்போது சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது மனைவி ஜனத்தா அப்துல்லா. 2 மகள்கள் உள்ளனர். 2008 முதல் திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். அதனைத்தொடர்ந்து 2014ல் சிறுபான்மை பிரிவில் மாநில துணை செயலாளர், 2018ல் திமுக தகவல் தொழில்நுட்ப மாநில துணை செயலாளர் பதவி வகித்து வந்துள்ளார். 2021 முதல் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : MM Abdullah ,DMK ,MK Stalin , State Assembly Election, DMK Candidate, MM Abdullah,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...