சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி: மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்; கண்காணிக்க குழு அமைப்பு

சென்னை: மெரினா கடற்கரைக்கு, பொதுமக்கள் அனுமதிக்கப்படும்  நிலையில் நேற்று கடற்பரப்பு முழுவதையும் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  வேகமாக பரவியதையடுத்து நாடு முழுவதும், கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதையடுத்து, மீண்டும் கடற்கரை மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை உருவானது.

இதனை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்ததையடுத்து மணற்பரப்பில் நடைபயிற்சி செய்யாமல் சர்வீஸ் சாலையில் சமூக இடைவெளி, முகக்கவசத்துடன் நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில்  நேற்று முன்தினம் முதல்வர் மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு  ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று திரையரங்குகளில் 50 சதவீதம் மக்கள்  அனுமதிக்கலாம் என்று தமிழக அரசால்  பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்லவும் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து இன்று காலை முதல் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சிக்காகவும்  பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் முன்கூட்டியே கடற்கரைகள்  சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் மணலை சமப்படுத்தும் இயந்திரத்தின் மூலமாக  மணற் பரப்பின் மேல் உள்ள குப்பை கூளங்கள், கடற்கரை ஒட்டிய பகுதிகள் சர்வீஸ் சாலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

கடற்கரையில் உள்ள பொதுக்கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தண்ணீர் வசதி  ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில் இன்று மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில்  அனுமதிக்கப்பட்டாலும், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது  உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவற்றை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories:

>