×

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு: இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும்; அரசு அறிவிப்பு அமலுக்கு வந்தது

சென்னை: கொரோனா தளர்வுகள் காரணமாக, தமிழகத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. இதேபோல், கடற்கரைகள், நீச்சல் குளங்கள், பார்கள் இன்று முதல் செயல்படும். ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. தடுப்பூசி, விழிப்புணர்வு காரணமாக தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது.

இந்நிலையில் 12வது முறையாக கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகளை வழங்குவது குறித்து நேற்று முன்தினம் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு தளர்வுகளுடன் வரும் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு  நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. இதனால், தியேட்டர்களை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே இடைவெளி விட்டே பார்வையாளர்கள் அமரவைக்கப்படுவார்கள். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.. கொரோனா அறிகுறி தென்படும் பார்வையாளர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதேபோல், இன்று முதல் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயிரியியல் பூங்காக்கள்,  தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்படும்.

விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் நீச்சல் குளங்கள் செயல்படும். பயிற்சியாளர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும்,  அனைத்து கடைகளும் இன்று முதல் இரவு  10 மணி வரை செயல்படும். புதுச்சேரியைத் தொடர்ந்து இன்று முதல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு  பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்கும். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் இன்று முதல் செயல்படும். . இதேபோல், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி  9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும். பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளிலும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags : Corona Curfew Relaxation Echo , Corona Curfew, Theaters, Government Announcement
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...