×

அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மனையில் வீடு கட்டி வசிப்பவர்களில் யார் யாருக்கு வரன்முறை: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில் வீடுகளில் வசித்து வரும் வாடகைதாரர்களை வரன்முறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: 2007-2008ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றான இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் உள்ள காலிமனைகளையும், கட்டிடப் பகுதிகளையும் குடியிருப்புக்காக கூட்டாக ஆக்கிரமித்து நாளது தேதி வரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் நபர்களை வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்துவது தொடர்பாக அரசாணை மூலமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி நீண்ட காலமாக (30 ஆண்டுகளுக்கு மேலாக) திருக்கோயிலுக்குச் சொந்தமான காலிமனைகளும், கட்டிடம் பகுதிகளும் குடியிருப்புக்காக கூட்டாக ஆக்கிரமித்து தொடர்ந்து நாளது தேதி வரை அவர்களால் பயன்படுத்தப்பட்டு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக” என்பது தொடர்புடைய நிலத்தில் உள்ள கூட்டு ஆக்கிரமணத்தின் காலத்தை நிர்ணயிக்க அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, 30 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டு ஆக்கிரமணத்திலிருக்கும் நபர்களை மட்டுமே வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்ற பொருளில் குறிப்பிடப்படவில்லை. மேலும் இது தொடர்பாக அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதாவது குறிப்பிட்ட இடம் திருக்கோயிலின் பயன்பாட்டுக்கு உடனடியாகவோ அல்லது எதிர்காலத்திலோ தேவைப்படாததாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 பேர்களுக்கு மேலாக குடியிருந்தால் தான் ‘‘கூட்டாக” என்று பொருள் கொள்ள வேண்டும்.

 ஒரு நபர் தன் குடியிருப்பு தேவைக்கு மேல் கூடுதலாக காலியிடத்தை அனுபவித்து வந்தால், கூடுதலாக உள்ள காலியிடத்தை திருக்கோயிலுக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் கூட்டாக ஆக்கிரமித்து குடியிருப்பவர்களில் ஒரு சிலர் அதை வேறு சிலர் பெயருக்கு மாற்றியிருக்கலாம். அத்தகையோர் உண்மையில் குடியிருந்தால் அவர்களையும் இத்திட்டத்தில் பரிசீலிக்கலாம். திருக்கோயிலுக்கு சொந்தமான காலிமனையிலும், கட்டிட பகுதியிலும் குடியிருப்புக்காக கூட்டாக ஆக்கிரமித்து வந்த நபர் இறந்து, தொடர்ந்து அந்த இடத்தை அவரது வாரிசுதாரர் யாரேனும் பயன்படுத்தி வந்தால் அதனை ஏற்று தற்போது இருப்பவர் பெயரில் வரன்முறைப்படுத்தலாம்.

வழிகாட்டுதல்களின்படி நியாய வாடகை நிர்ணயம் செய்து மொத்த நிலுவை தொகையினை கணக்கிட்டு 12 மாதங்களில் சம தவணைகளில் செலுத்த வேண்டும். இந்த  நியாய வாடகையில் 10 மாத வாடகையை திருக்கோயிலுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும். முதல் மாத தவணை நிலுவையும், நன்கொடையும், நடப்பு மாத வாடகையையும் செலுத்தும் ஆக்கிரமிப்புதாரர்களுக்கு மின்வசதி மற்றும் ஏனைய வசதிகளுக்கான அனுமதி பெற தடையில்லாச் சான்று வழங்கலாம். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாத ஆக்கிரமிப்புதாரர்கள் மீது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். அந்நிறுவணங்களுக்குச் சொந்தமான காலிமனை மற்றும் கட்டிடப் பகுதிகளில் குடியிருப்பிற்காக கூட்டாக ஆக்கிரமித்து தொடர்ந்து பயன்படுத்தி வரும் நபர்களை வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்துதல் தொடர்பான அறிவுரையை நீண்டகாலமாக செயல்படுத்தப்படாமல் உள்ளதாக அறியப்படுகிறது.

எனவே, அறிவுரைகளின்படியும், அரசாணையில் உள்ளவற்றின் அடிப்படையிலும், ஒவ்வொரு நேர்வாகப் பரிசீலித்து, திருக்கோயில் அறங்காவலரிக்குழு/ தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில், தலைமையிடத்தில் உள்ள இரு மாவட்ட வருவாய் அலுவலர்/தனி அலுவலர்கள்(ஆல நிலங்கள்) பரிசீலித்து கூட்டு ஆக்கிரமிப்புதாரர்களை வாடகைதாரர்களாக வரன்முறை செய்து ஆணையரால் உத்தரவிட எதுவாக அனைத்து மண்டல இணை ஆணையர்களும் குறிப்பான பரிந்துரையுடன் வருகிற 31ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக்கிரமித்து வந்த நபர் இறந்து, தொடர்ந்து அந்த இடத்தை அவரது வாரிசுதாரர் யாரேனும் பயன்படுத்தி வந்தால் அதனை ஏற்று தற்போது இருப்பவர் பெயரில் வரன்முறைப்படுத்தலாம்.


Tags : Commissioner ,Kumarakuruparan , Charity Department, Temple Land, House, Commissioner Kumarakuruparan
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...