×

மாஜி அமைச்சர் செங்கோட்டையனின் வலதுகரமாக செயல்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் கொலை மிரட்டல் வழக்கில் கைது

கோபி: கொலை மிரட்டல் வழக்கில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பி என்கிற சுப்பிரமணியம் இருந்து வருகிறார். இவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வலது கரமாக செயல்பட்டு வந்துள்ளார். கோபி அருகே வெள்ளகோயில் பாளையத்தில் கடந்த 14ம் தேதி  தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் நம்பியூர் சுப்பிரமணியம் ஆதரவாளர்களுடன், தடுப்பூசி போட காத்திருந்தவர்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கினார்.

அப்போது கோசனம் பொத்தபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவர், கொரோனா காலத்தில் தடை உத்தரவு உள்ள நேரத்தில்  இது போன்று கூட்டமாக முக கவசம் அணியாமல் செயல்படலாமா? என்று  கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியம், இளங்கோவை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளங்கோ அளித்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் கடந்த 14ம் தேதி கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை, வீட்டில் இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்து  சிறுவலூர் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அப்போது அங்கு திரண்ட அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, சுப்பிரமணியத்துக்கு கோபி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து, மாஜிஸ்திரேட் விசுநாதன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் சுப்பிரமணியம் அடைக்கப்பட்டார்.

* சிறைக்கே சென்று செங்கோட்டையன் சந்தித்தார்
கைதான நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியத்தை போலீசார் நேற்று சிறுவலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசினார். அதன்பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட சுப்பிரமணியத்தை நேற்று மாலை செங்கோட்டையன் சந்தித்து சிறிது நேரம் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Union ,Maji Minister Sengottian , AIADMK secretary arrested for threatening to kill former AIADMK minister
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...