இன்று முதல் திரையரங்கு திறப்பு ரசிகர்களுக்கு மாஸ்க் இலவசம்: தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: கொரானா 2வது அலை ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தியேட்டர்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு இலவச மாஸ்க் வழங்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டது திரைப்பட உலகம். முதல் அலையின்போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. அதுவும் 50 சதவிகித இருக்கை அனுமதியுடன். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதித்திருந்த நிலையில், கொரோனா 2வது அலை பரவியதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி 50 சதவிகித இருக்கைகளுடன் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். திறப்பு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் தியேட்டர் ஊழியர்களுக்கு தடுப்பூசிபோடும் பணியை முன்பே தொடங்கி விட்டோம்.

இதுவரை 90 சதவிகித ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள். ‘‘நான் தடுப்பூசி போட்டுவிட்டேன்” என்கிற பனியன் அணிந்துதான் பணி செய்வார்கள். அதோடு தியேட்டர் ஊழியர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்.

படம் பார்க்க வரும் ரசிகர்கள் பயன்படுத்தும் விதமாக ஒவ்வொரு வகுப்பு நுழைவு வாயிலும் சானிடைசர் வைக்கப்படும். ஒவ்ெவாரு காட்சியின் இடைவெளியிலும் தியேட்டர் முழுக்க  சானிடைசர் தெளிக்கப்படும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும், கழிப்பிடங்களை போதிய சமூக இடைவெளியுடன் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும். தியேட்டர் இருக்கைகளில் சமூக இடைவெளிக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா விழிப்புணர்வு படங்கள், சிலைடுகள் திரையிடப்படும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கிற்கு முன்னுரிமை தரப்படும். இதுபோன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாளை (இன்று) முதல் எல்லா தியேட்டர்களும் இயங்காது. பல தியேட்டர்களில் இன்னும் சுத்தப்படுத்தும் பணி முடியவில்லை. அதோடு திரையிடுவதற்கு படங்களும் இல்லை. வருகிற வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களை பொறுத்து தியேட்டர்கள் திறக்கப்படும். மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் ஏற்கெனவே தயாராக உள்ளன. அவற்றில் திரையிட ஹாலிவுட் படங்களும், இந்தி படங்களும் தயாராக உள்ளது. அதனால் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டு விடும். தியேட்டர்களில் இயல்பு நிலை திரும்பு இன்னும் சில நாட்கள் ஆகும். என்றார்.

Related Stories: