×

சின்சினாட்டி ஓபன் பைனலில் ஆஷ்லி - ஜில் மோதல்

சின்சினாட்டி: வெஸ்டர்ன் அண்டு சதர்ன்  சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டியுடன் (ஆஸி.), சுவிட்சர்லாந்தின் ஜில் தெய்க்மன் மோதுகிறார்.
இந்த தொடரில் ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கிய ஜில் தெய்க்மன் (24 வயது, 76வது ரேங்க்), அடுத்தடுத்து முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் செக் குடியரசின்  கரோலினா பிளிஸ்கோவாவை (4வது ரேங்க்) எதிர்கொண்ட அவர் அதிரடியாக விளையாடி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் பிளிஸ்கோவா கடும் நெருக்கடி கொடுத்தாலும், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த தெய்க்மன் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. டபுள்யு.டி.ஏ தொடரின் இறுதிப் போட்டிக்கு தெய்க்மன் முதல் முறையாக தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரையிறுதியில் ஆஸி. நட்சத்திரம் ஆஷ்லி பார்டி 6-2, 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தினார். இப்போட்டி, 1 மணி, 14 நிமிடத்துக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் ஆஷ்லி பார்டி - ஜில் தெய்க்மன் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

மெட்வதேவ் ஏமாற்றம்: இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், முதல் நிலை வீரரான டானில் மெட்வதேவ் சக ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லேவிடம் 6-2, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-4, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 41 நிமிடத்துக்கு நீடித்தது. இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் - ருப்லேவ் மோதுகின்றனர்.

Tags : Ashley - Jill ,Cincinnati Open , Ashley - Jill clash in Cincinnati Open final
× RELATED சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக ஜோகோவிச் சாம்பியன்