×

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: பிரதமர் மோடி புகழாரம்

லக்னோ: உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் உடலுக்கு தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர் கல்யாண் சிங் (89). உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர். கடந்த 2019ல் வரையில் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோதுதான், அயோத்தியில் 1992, டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்தனர்.

இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருடன் இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலையில் லக்னோவில் இருக்கும் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் கல்யாண் சிங் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். லக்னோவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரடைய மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. அவருக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதனால், இம்மாநிலத்தில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக லக்னோ வந்த அவர், கல்யாண் சிங் உடலுக்கு மலர்வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினார். பாஜ தலைவர் ஜேபி நட்டா, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இருந்தனர். பின்னர், மோடி கூறுகையில், ‘‘தனது வாழ்நாள் முழுவதும் பொதுமக்கள் நலனுக்காக வாழ்ந்தவர் கல்யாண் சிங். பாஜ, பாரதிய ஜனதா சங் குடும்பம், அதன் கொள்கைகள் மற்றும் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்காக தனது மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். எம்எல்ஏ, முதல்வர், ஆளுநர், என எந்த பணியாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும் மையமாக அவர் செயல்படுவார். அவர் மக்களின் நம்பிக்கை அடையாளமாக திகழ்ந்தார்,’’ என்றார். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் கல்யாண் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.


Tags : Uttar Pradesh ,Chief Minister ,Kalyan Singh ,PM Modi , Leaders pay homage to former Uttar Pradesh Chief Minister Kalyan Singh's body: PM Modi
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...