×

கோவில்பட்டி பகுதியில் வேப்பமுத்து விளைச்சல் குறைவால் கொள்முதல் விலை அதிகரிப்பு..!

கோவில்பட்டி:,கோவில்பட்டி பகுதியில் இந்த ஆண்டு வேப்ப முத்துக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. ஆனாலும் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் வேப்பமுத்து சேகரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  ஒவ்வொரு ஆண்டும் கோடையில் வேப்ப மரங்கள் பூத்துக்குலுங்கும். ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை வேப்பமரங்களில் அதிகப்படியான காய்கள், பழங்கள் காய்த்துக் குலுங்கும். வேப்பமரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டிருந்தாலும், வேப்ப எண்ணெய், உரங்கள் தயாரிக்க வேப்ப முத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலத்தில் கோவில்பட்டி பகுதியில் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களில் இருந்து வேப்ப முத்துக்கள் சேகரிக்கப்படும். சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் உட்பட சிலர் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் வேப்ப முத்துக்கள் சேகரிக்கும் தொழில் மேற்கொள்வர்.

இந்த ஆண்டு வேப்பமரங்களில் காய்ப்புத்தன்மை குறைந்துள்ளதால் வேப்ப முத்துக்கள் வரத்தும் குறைந்துள்ளது.  இதுகுறித்து வேப்பமுத்து வியாபாரி ஒருவர் கூறும்போது: ‘கோவில்பட்டி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான அளவில் வேப்ப முத்துக்கள் கிடைக்கும். கடந்த ஆண்டு இதே நாளில் கிடைத்த அளவில் தற்போது மூன்றில் ஒரு பங்கு கூட வரத்து இல்லை. கடந்த கோடையில் பெய்த மழையில் வேப்ப மரங்களில் இருந்த பூக்கள் பெருமளவு உதிர்ந்து விட்டது. இதனால் காய்ப்புத்தன்மை குறைந்து விட்டது. மேலும் வேப்ப மரங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. வேப்ப முத்துக்கள் கடந்த ஆண்டு கிலோ ரூ.50க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.10 அதிகரித்து ரூ.60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது’ என்றார். வேப்பமுத்து கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் வேப்ப முத்து சேகரிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Vetapuri ,Kovilbati , Purchase price increase due to low neem yield in Kovilpatti area ..!
× RELATED கோவில்பட்டி அரசு மருத்துவமனையில்...