×

நடன பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் விவகாரம் முக்கிய விவிஐபிக்கள் சிக்குகின்றனர்: கைதான ராஜா பரப்பரப்பு வாக்குமூலம்

காரைக்குடி: திருமண வரவேற்பு நடன பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், முக்கிய விவிஐபிக்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே இடையர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (எ) ராஜா (34). இவர், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார். மேலும் வரவேற்பு பணியில் ஈடுபட 30க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ‘வெல்கம் கேர்ள்ஸ்’ தொழிலும் செய்துள்ளார். ராஜா தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை மது குடிக்க வைத்து, வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும், முக்கிய விவிஐபிகளுக்கு ஒரு மாதம், இரண்டு மாதம் வரை தொகை பேசி பெண்களை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இவரது நிறுவனத்தில் பணியாற்றிய தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணிடம் 10 நிமிடத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழில் ஈடுபடுத்த முயன்றுள்ளார். அவர் மறுக்கவே தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அந்த பெண் தன் நண்பர்களிடம் தெரிவித்து, காரைக்குடி அருகே அமராவதிபுதூருக்கு ராஜாவை வரவழைத்து அவரை தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. பெண்கள் தாக்கியது குறித்து ராஜா, சாக்கோட்டை காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய மாயவதனிடம் புகார் தெரிவித்தார். அவர், அந்த பெண்களிடம் பேசும் ஆடியோ மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட ராஜா வற்புறுத்தும் ஆடியோவும் வைரலாக பரவியது.

பாதிக்கப்பட்ட தஞ்சையை சேர்ந்த பெண்கள், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாநில மனித உரிமைகள் தலைவருக்கு புகார் மனு அனுப்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, முக்கிய விவிஐபிகளுடன் பெண்களை அனுப்பி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் முக்கிய விஐபிக்கள் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது. உயரதிகாரிக்கு தெரிவிக்காமல் தானாகவே பெண்களிடம் விசாரணை செய்த, போலீஸ்காரர் மாயவதன் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

Tags : Tarcher , For dancing women, sex, arrested king, confession
× RELATED நடன பெண்களை பாலியல் தொழிலில் தள்ளி...