வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் பைனலில் ஸ்வரெவ், ஆஷ்லீ பார்டி

சின்சினாட்டி: சின்சினாட்டியில் நடந்து வரும் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வரெவ் மற்றும் ஆண்ட்ரே ரப்லெவ் பைனலுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லீ பார்டியும், ஜில் டெய்க்மானும் பைனலில் மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் செமி பைனலில் ரஷ்ய வீரர்கள் டேனில் மெட்வடேவும், ஆண்ட்ரே ரப்லெவும் மோதினர். ஏடிபி தரவரிசையில் டேனில் மெட்வடேவ் 2ம் இடத்திலும், ஆண்ட்ரே ரப்லெவ் 7ம் இடத்திலும் உள்ளனர். இப்போட்டியில் முதல் செட்டை 6-2 என மெட்வடேவ் எளிதாக கைப்பற்றினார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அடுத்த 2 செட்களை 6-3, 6-3 என கைப்பற்றி, மெட்வடேவை, ரப்லெவ் வீழ்த்தினார்.

இன்று காலை நடந்த மற்றொரு செமி பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும், கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசும் மோதினர். ஏடிபி தரவரிசையில் சிட்சிபாஸ் 3ம் இடத்திலும், ஸ்வரெவ் 5ம் இடத்திலும் உள்ளனர். இதில் முதல் செட்டை 6-4 என ஸ்வரெவ் கைப்பற்றினார். 2ம் செட்டை 6-3 என்ற கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்றினார். 3வது செட்டில் இருவரும் கடுமையாக போராடினர். அதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை நீடித்தது. டைபிரேக்கரில் ஸ்வரெவ் அந்த செட்டை கைப்பற்றி 7-5, 3-6, 7-6 என 3 செட்களில் வென்று, பைனலுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலாவது செமி பைனலில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி, ஜெர்மனியின் ஆங்கிலிக் கெர்பரை 6-2, 7-5 என நேர் செட்களில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு செமி பைனலில் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 6-2, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி, ஸ்விட்சர்லாந்தின் இளம் வீராங்கனை ஜில் டெய்க்மான், பைனலுக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில், இன்று நடந்த பைனலில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசூர், சீனாவின் ஜாங் ஹூவாய் ஜோடி 7-5, 6-3 என்ற செட் கணக்கில், கனடாவின் கேப்ரியேலா, பிரேசிலின் லூயிசா ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

Related Stories: