×

வேலூர் பழைய மீன்மார்க்கெட்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.70 லட்சத்தில் கட்டிய 252 கடைகள் வீணாகி வருகிறது

* தீர்வு காண முடியாமல் திணறும் மாநகராட்சி
* ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி
வேலூர்: வேலூர் பழைய மீன்மார்க்கெட்டில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதை வியாபாரிகளுக்கு ₹70 லட்சத்தில் கட்டிய 252 கடைகள் வீணாகி வருகிறது. கடைகள் அமைப்பதில் உள்ள பிரச்ைனகளுக்கு தீர்வு காண முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.  
தமிழகத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேலூர் மாநகராட்சியில் கிருபானந்த வாரியார் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் தரைக் கடைகள் அமைத்து கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ₹70 லட்சம் மதிப்பீட்டில் 252 தரைக்கடைகள் கழிவறை மற்றும் குடிநீர் வசதியுடன் புதுப்பிக்கப்பட்டது.

இதில் கிருபானந்தவாரியார் சாலை நடைபாதை வியாபாரிகள் 154 பேருக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மீதமுள்ள கடைகளே வேறு நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்தது. மேலும் தரை வாடகையும் ₹100 நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது. தொடர்ந்து மீன் மார்க்கெட் வளாக கடைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டது. இதனை ஏலம் எடுத்தவர்கள், முன்பகுதி கடைகளுக்கு ₹20 ஆயிரம், பின்பகுதி கடைகளுக்கு ₹10 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு கடை ஒதுக்கியதாக அப்போது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்த்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி சார்பில் மீண்டும் ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர் அதற்கான தொகையை செலுத்தாததால் ஏலமும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மறு ஏலம் விடப்பட்டது. இதில் முந்தைய ஏலத்தொகையை விட குறைவாக இருந்ததால் அந்த ஏலமும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு பழைய மீன் மார்க்கெட் கடைகள் ஏலம் விடுவதில் தொடர்ந்து நீடித்து வந்த இழுபறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ₹80.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

ஆனால், வியாபாரிகள் பழைய மீன்மார்க்கெட்டில் கடைகள் மட்டும் ஒதுக்கீடு பெற்றுக்கொண்டனர். வியாபாரம் பழைய படியே கிருபானந்த வாரியார் சாலை முழுவதையும் ஆக்கிரமித்து செய்து வருகின்றனர். பழைய மீன்மார்க்கெட்டில் கடைகள் வைத்தால் வியாபாரம் சரியாக நடைபெறுவதில்லை என்று கூறுகின்றனர். மாநகராட்சி நிர்வாகமும் சரியான முடிவு எடுத்து, இதற்கு தீர்வு காண முடியாமல் திணறி வருகிறது. இந்த பிரச்னைகளால் வேலூர் கிருபானந்த வாரியார் சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து ெசல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் பஸ் போக்குவரத்து இருந்த சாலை தற்போது, மக்கள் நடந்து செல்லவும் முடியாத நிலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள நடைபாதை வியாபாரிகளை, மீன்மார்க்கெட் கடைகளுக்கு மாற்ற மாநகராட்சி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
வேலூர் மீன்மார்க்கெட்டில் அமைத்துள்ள நடைபாதை வியாபாரிகளுக்கான பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் மீன்மார்க்கெட் கடைகளை பொதுமக்களுக்கு வசதியாக பார்க்கிங் ஏரியாவாக மாற்றினால், நேதாஜி மார்க்கெட்டிற்கும், சாரதி மாளிகைக்கும் வந்து செல்லும் மக்கள் பயன்பெறுவர். இதனால் அண்ணாசாலையிலும் போக்குவரத்து பாதிப்பு இருக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags : Valor , Vellore, Old Fish Market, 5 years, Merchant, Rs.70, Shops
× RELATED கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்