நெமிலி அருகே அதிமுக ஆட்சியில் ஊராட்சி அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டியும் பணிகள் தொடங்கவில்லை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி: நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம் இடிந்து விழும்  நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகம் பழுதடைந்து உள்ளது என்றும், புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில் கடந்த அதிமுக ஆட்சியில் ₹20 லட்சம் நிதி ஊரக வளர்ச்சித் துறை  சார்பில் ஒதுக்கப்பட்டது. இதில் கடந்த  ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய  அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ சு.ரவி புதிய ஊராட்சி அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் இப்பணியை இன்றும் துவங்கபடாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று அரசின் திட்டங்களை கேட்டு அறிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அடிக்கல் நாட்டப்பட்ட  ஊராட்சி அலுவலகக் கட்டிட  பணி தொடங்கி விரைவில்  கட்டி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: