சிவகங்கை அருகே 16ம் நூற்றாண்டு சிற்பம் கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே 16ம் நூற்றாண்டை சேர்ந்த நவகண்ட சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை தொல்நடை குழுவைச் சேர்ந்த புத்தகக்கடை முருகன், முத்துப்பட்டியில் தனியார் இடத்தில் சிலை ஒன்று இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சிவகங்கை தொல் நடை குழு நிர்வாகிகள் காளிராசா, சுந்தரராஜன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில் சிலை 16ம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் என அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து காளிராசா கூறுகையில், ‘‘நவகண்டம் என்பது உடலில் 9 இடங்களில் வெட்டிக்கொண்டு உயிரை விடுவதாகும். அவிப்பலி, அரிகண்டம், தூங்குதலை என உயிர் விடுதலில் பல வகைகள் உள்ளன. அரசர் போரில் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கொற்றவையின் முன்பு தன் தலையை வீரர் பலி கொடுத்தலே இதன் உட்பொருளாகும். சங்க காலம் தொட்டு இது இருந்தது.

எனினும் 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை இம்மரபு உச்சம் தொட்டுள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலை சுமார் மூன்றடி உயரத்தில் ஒன்றரை அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைமுடி கொண்டையாகவும், சிதறிய மூன்று கற்றைகளாகவும், முகத்தில் மீசை, கழுத்தில் வேலைப்பாட்டோடு தொங்குகின்ற ஆபரணம், உடை காணப்படுகிறது. இடுப்பில் உறையுடன் கூடிய குத்துவாள் ஒன்றும் உள்ளது. ஒரு கை வில்லுடனும் மற்றொரு கை சிதைந்தும் காணப்படுகிறது. கழுத்தில் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக கத்தி குத்தியபடி இந்த நவகண்ட சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு 16ம் நூற்றாண்டு எனக் கருதலாம்’’ என்றார்.

Related Stories:

>