×

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு முன் குறுவை நெல் அறுவடை தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது, அணை திறப்பதற்கு முன்பே மயிலாடுதுறை குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி சீர்காழி பகுதிகளில் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடிக்காக நாற்றுவிடும் பணி நடந்தது. பின்னர் குறித்த காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்ததால் நடவுபணிகள் மும்முரமாக நடந்து, தற்போது நெல்மணிகள் முதிர்ச்சி அடைந்து அறுவடை பணிகள் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை சன்னரகத்தை கிலோ ரூ.19.60 என்றும் மோட்டா ரக நெல் ரூ.19.40 என்றும் விலை கொடுத்து தமிழக அரசு வாங்கிவருகிறது. வழக்கமாக குறுவை நெல்லை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம்தேதி முதல் டிசம்பர் 15ம்தேதி வரையிலும், சம்பா தாளடி நெல்லை டிசம்பர் 16ம் தேதியிலிருந்து ஜூலை 31வரை கொள்முதல் செய்வது வாடிக்கை. அறுவடைக்கு ஏற்ப நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்வார்கள். வாங்கும் நெல் கெட்டுப்போகாமல் பாதுகாப்பற்காக நெல்லின் ஈரப்பதம் அதிகபட்சம் 17 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.

தற்போது அறுவடைக்கு மழைதான் ஒரு தடையாக இருந்து வருகிறது. ஆகவே நெல் விளைந்த உடன் அறுவடை செய்து விடுவார்கள். ஆனால் ஈரத்தை உலர்த்தினால்தான் அரசு கொள்முதல் செய்யும் என்பதால் களம் மற்றும் சாலைகளில் கொட்டி நெல்லை காயவைத்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அரசு கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 மாமூல் அளித்தும் ஈரப்பதம் 17சதம் வரை காயவைத்து அரசிடம் விற்பதைவிட தனியார் வியாபாரிகளிடம் விற்பது மேலானது எனநினைத்து தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்றுவந்தனர். தனியார் வியாபாரிகள் குறுவை நெல்லை வாங்க தயங்கியதால் விவசாயிகளும் வேறு வழியின்றி கொள்முதல் நிலையங்களை நாடினர். ஒருசில வாரமாகவே எந்த நேரத்தில் எந்த இடத்தில் மழை பெய்யும் என்ற பயத்தில் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விடுகிறது. மேலும் மழை தொடர்ந்தால் சாய்ந்துபோன பயிர்கள் வீணாகி நட்டத்தை ஏற்படுத்தும் என்பதால், மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்ததும் அவசர அவசரமாக விவசாயிகள் வயலில் உள்ள நெல்லை அறுவடை செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். தற்போது மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் அறுவடை பணியில் விவசாயிகள் தீரமாக இறங்கியுள்ளனர்.



Tags : Mayiladuthurai district , Mayiladuthurai, rain, paddy harvest
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...