நடன பெண்களை பாலியல் தொழிலில் தள்ளி ‘டார்ச்சர்’ முக்கிய விஐபிக்களுக்கு தொடர்பு: கைதான ராஜா திடுக் தகவல்

காரைக்குடி:  திருமண வரவேற்பு நடன பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், முக்கிய விஐபிக்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே இடையர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (எ) ராஜா(34). இவர், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார். மேலும் வரவேற்பு பணியில் ஈடுபட 30க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ‘‘வெல்கம் கேர்ள்ஸ்’’ தொழிலும் செய்கிறார். இவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை மது குடிக்க வைத்து, வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும், விவிஐபிகளுக்கு ஒரு மாதம், இரண்டு மாதம் வரை தொகை பேசி பெண்களை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இவரது நிறுவனத்தில் பணியாற்றிய தஞ்சாவூரை சேர்ந்த பெண்ணிடம் 10 நிமிடத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார். அவர் மறுத்தும் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த பெண் தன் நண்பர்களிடம் தெரிவித்து, காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அவர்கள் ராஜாவை தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. இதுபற்றி ராஜா, சாக்கோட்டை காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய மாயவதனிடம் புகார் தெரிவித்தார். இதைதொடர்ந்து அவர், அந்த பெண்களிடம் பேசும் ஆடியோ மற்றும் ராஜா பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தும் ஆடியோ வைரலாக பரவியது.

இது குறித்து தஞ்சையை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள், முதல்வர் தனிப்பிரிவு மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார், ராஜாவை கைது செய்தனர். புகார் தெரிவித்த பெண்களிடம், போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின்போது, முக்கிய விவிஐபிகளுக்கு பெண்களை அனுப்பி வைத்தது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ராஜா தெரிவித்ததாகவும், இதனடிப்படையில் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Related Stories:

More