×

சின்சினாட்டி ஓபன்: ஜில் தெய்க்மன் அசத்தல் தொடர்கிறது!

சின்சினாட்டி: வெஸ்டர்ன் அண்டு சதர்ன்  சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட  சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் தெய்க்மன் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் சக சுவிஸ் வீராங்கனையும் ஒலிம்பிக் சாம்பியனுமான  பெலிண்டா பென்சிக்குடன் (12வது ரேங்க்),  ஜில் தெய்க்மன் (76வது ரேங்க்) மோதினார். இதில் பென்சிக் எளிதில் வெல்வார் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசத்தலாக விளையாடிய ஜில் 6-3, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தி அசத்தினார். இப்போட்டி ஒரு மணி, 11 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஜில் ஏற்கனவே காலிறுதியில்  முன்னணி வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவை (2வது ரேங்க்) வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் அவர் செக் குடியரசு வீராங்கனை  கரோலினா பிளிஸ்கோவாவை (4வது ரேங்க்) எதிர்கொள்கிறார். முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில்  பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா,  ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட பெத்ரா குவித்தோவா  ஆகியோர் காயம் காரணமாக பாதியில் விலகினர்.

கடைசி காலிறுதியில்  ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி (1வது ரேங்க்) 6-2, 6-4 என நேர் செட்களில் செக் குடியரசின்  பார்போரா கிரெஜ்சிகோவாவை (10வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தார். அரையிறுதியில் ஆஷ்லி பார்டி - ஏஞ்சலிக் கெர்பர் மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் அரையிறுதிக்கு ஆந்த்ரே ருப்லேவ், டானில் மெத்வதேவ் (ரஷ்யா),  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்),  அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோர் தகுதி பெற்றனர்.

Tags : Cincinnati Open ,Jill Teigman , Cincinnati Open, Jill Teigman,
× RELATED சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக ஜோகோவிச் சாம்பியன்