×

ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நகைக் கடைக்காரர்கள் நாளை ஸ்டிரைக்

புதுடெல்லி: தங்க நகைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஹால் மார்க் முத்திரையுடன்தான் தங்க நகைகளை விற்க வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது. இந்த உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் மாதம் தங்க நகை விற்பனையார்களுடன் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 16ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து நகைக்கடைக்காரர்களும் தற்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறைக்கு பல்வேறு நகைக்கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட 256 மாவட்டங்களில் 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற உத்தரவை ஒன்றிய அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அகில இந்திய நகைக்கடைக்காரர்கள் கவுன்சில் சார்பில் ஆகஸ்ட் 23ம் தேதி (நாளை) அடையாள வேலை நிறுத்தம் செய்ய, நகைக் கடைக்காரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை கைவிடும்படி ஒன்றிய அரசு நேற்று இந்த அமைப்பை வலியறுத்தியது.

Tags : Hallmark , Hallmark logo, jewelry store, Strike
× RELATED புதிய ஹால்மார்க் விதிகளை கண்டித்து...