விருதுநகரில் பயங்கரம் போலீஸ் பெல்ட்டால் கழுத்தை நெரித்து பெண் ஏட்டு கொலை: கணவன் கைது

விருதுநகர்:  விருதுநகரில் பெண் ஏட்டை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பானுப்பிரியா (31). கணவர் மதுரை, பழங்காநத்தத்தை சேர்ந்த விக்னேஷ்(37). இவர் மதுரையில் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். 2 மகன்கள் உள்ளனர். விருதுநகர் சூலக்கரை மேட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக விக்னேஷ், பானுப்பிரியாவிடம் மதுரைக்கு மாறுதல் வாங்கி வந்தால், பழங்காநத்தத்தில் உள்ள சொந்த வீட்டில் குடியிருக்கலாம் என தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வேலை முடித்து வந்த விக்னேஷ், ஏடிஎம் கார்டை கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பானுப்பிரியாவின் போனை உடைத்ததுடன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். சிறிது நேரத்தில் விக்னேஷ் வெளியே சென்றார். வீட்டில் பானுப்பிரியா வாந்தி எடுத்த நிலையில் கழுத்தில் காயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த உறவுக்கார பெண் ஒருவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு, ஏற்கனவே பானுப்பிரியா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது, ஆத்திரத்தில் போலீஸ் பெல்ட்டால் பானுப்பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை விக்னேஷ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>