×

கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதல் 7 வக்கீல்கள் தொழில் செய்ய தடை: பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: கோட்டூர்புரம், நாயுடு தெரு, 4வது சந்து பகுதியை சேர்ந்தவர் தாமஸ் தனசீலன் (63). அதே தெருவில் வசிப்பவர் பத்மநாபன் (40). இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இந்த தெருவை சிமென்ட் சாலையாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அவ்வாறு சாலை அமைத்தால், தனது வீட்டில் மழைநீர் புகுந்துவிடும் நிலை ஏற்படும். எனவே, சாலை அமைக்க கூடாது என பத்மநாபன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், பொதுமக்கள் நலன் கருதி சாலை அமைக்க வேண்டும், என தாமஸ் தனசீலன் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையில் அந்த தெருவில் தண்ணீர் தேங்கியது. இதனால், தாமஸ் தனசீலன் மற்றும் அந்த தெருவில் வசிப்பவர்கள் சேர்ந்து, தெருவை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மநாபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார், இரு தரப்பையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சமாதானம் செய்தனர். அப்போது, அங்கு வந்த இருதரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதல் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செல்லம்மாள் ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் இதுபற்றி விசாரணை நடத்தி, காவல் நிலையத்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் பாலமுருகன், மணிகண்டன், ஏஞ்சல்ஸ் மற்றும் பத்மநாபன், அரிகரன், நெப்போலியன், ராஜேஷ்வரன் ஆகிய 7 பேரை தொழில் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Kotturpuram ,Bar Council , Conflict in the police station, lawyer, ban on doing business, Bar Council
× RELATED சென்னை கோட்டூர்புரம் அண்ணா...