×

காவல் துறைக்கு ரேடியோ, சிசிடிவி போன்ற கருவிகள் வாங்கியதில் முறைகேடு எதிரொலி தமிழக தொழில் நுட்ப பிரிவு எஸ்பி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு: அரசு அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழக காவல் துறைக்கு, தொழில் நுட்ப உபகரணங்கள் வாங்கிய முறைகேடு வழக்கில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள  14 காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக காவல்துறைக்கு ரேடியோ, சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது. கருவிகள் கொள்முதல், நிறுவுதல், பராமரித்தல் உள்பட அனைத்து பணிகளையும், தமிழக காவல்துறை தொழில்நுட்ப சேவை பிரிவு செய்கிறது.

இந்நிலையில் இதற்கான கருவிகளை வாங்க டெண்டர் விடப்படப்படுவது வழக்கம். இதில் ெபரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அந்த புகார்களின் அடிப்படையில் உள்துறைச் செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், டெண்டர் விடும் நடவடிக்கையில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.  அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொழில் நுட்ப பிரிவு எஸ்.பி உள்ளிட்ட 14 போலீசார் மீதும், இரண்டு தனியார் நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி, 2 ஏ.டி.எஸ்.பிக்கள், ஒரு ஓய்வு பெற்ற ஏடிஎஸ்.பி, 7 இன்ஸ்பெக்டர்கள் ,3 உதவி ஆய்வாளர்கள், 2 தனியார் நிறுவனம் என 16 பேர் மீது வழக்கும், தொழில் நுட்ப உபகரணங்கள் தொடர்பான டெண்டர் முறைகேட்டில்  மற்றொரு நிறுவனமும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில் 308 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா செயல்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவாகரத்தில் லஞ்சம் பெற்றது. தொழில்நுட்ப பிரிவு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 14 காவல் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது.அதைப்போன்று உயர்அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் காவல் துறையின் சிறப்பு நிதியை தவறாக பயன்படுத்தி ஜிபிஎஸ் கருவி வாங்கிய முறைகேடுகளும் தொழில்நுட்ப பிரிவு டிஐஜி அளித்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2016-17ம் ஆண்டு வரை 105 எச்எப் மோடம் வாங்கியதில் ரூ.1 கோடி 74 லட்சத்து 24 ஆயிரம், 2018-19ம் ஆண்டு வரை 129 சிசிடிவி ரூ.3 கோடியே 87 லட்சம், 2016-17ம் ஆண்டு வரை 13 ரேடியோ எச்எப் மோடம் ரூ. 74 லட்சத்து 44 ஆயிரம், 2017ம் ஆண்டில் ஆயிரத்து 767 டேப்லட் பிசி 1300, 5ஜி டேட்டா கனெக்‌ஷன் ரூ. 63 லட்சத்து 44 ஆயிரத்து 716, 2018-19 வரை 5 மெஜஞ்சர்ஸ் ரூ.65 லட்சத்து 63 ஆயிரத்து 160 என முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.  அதைப்போன்று மற்றொரு நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டில் சிசிடிவி ஐபி கேமரா 308 காவல் நிலையங்களில் ஆய்வு செய்யாமலேயே அந்த சிசிடிவி கேமராக்கள் நல்ல முறையில் செயல்படுவதாக தொழில்நுட்ப பிரிவு ஐஜியின் அனுமதி இல்லாமலேயே தொழில் நுட்ப பிரிவு எஸ்.பி, ஆய்வாளர் சேர்ந்து சான்றிதழை லஞ்சம் பெற்று கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐடிபி 120(பி)- கூட்டுச்சதி, 465- போலி ஆவணம் பயன்படுத்துதல். 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணம் தயாரித்தல், 471- போலி ஆவணத்தை உண்மை என உபயோகப்படுத்துதல், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு- 13(2) r/w 13(1) (c) & (d) and 7, 7(A), 15 r/w 13(1) உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழில் நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள் அரசு டெண்டரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4 முக்கியமான டெண்டர்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய எஸ்பி உட்பட அதிகாரிகள் யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.

எஸ்பி மட்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற போலீசார் அனைவரும் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் இன்னும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு முக்கிய வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், காவல் துறையில் நடந்த இந்த முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கை இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 தனியார் நிறுவனங்கள் அரசு டெண்டரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Technical Division , Police, Radio, CCTV, Echo of Abuse, Tamil Nadu Technical Division
× RELATED காவல் துறையின் தொழில் நுட்பப் பிரிவு...