×

மேற்கு மண்டலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றிய 23 இன்ஸ்பெக்டர்களுக்கும் மீண்டும் அதே பகுதியில் பணி

சென்னை: தமிழக மேற்கு மண்டல பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பணியாற்றிய 23 இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் மேற்கு மண்டலத்திலேயே பணியாற்றுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் உயர் அதிகாரிகள் பலர் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே டிஜிபி திரிபாதி தவிர மற்ற அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இந்த மாற்றங்களை டிஜிபி திரிபாதி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். அதில் உச்சபட்ச அராஜகம் நடந்தது மேற்கு மண்டலத்தில்தான் என்ற குற்றச்சாட்டுகள் கடந்த ஆட்சியில் எழுந்தது. இதனால் மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் பலரும் தென் மண்டலம் மற்றும் வடக்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் மாற்றப்படாமல் விடுபட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அதிமுக மாஜி அமைச்சர்களால் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதால், அவர்களில் பலர் தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறைப்படி மாற்றம் செய்யப்பட்டனர். வெளி மாவட்டங்களில் பணியாற்றிய பலர் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தேர்தலுக்காக இந்த 4 மாவட்டத்துக்குள் வந்த பலரும், அமைச்சரின் ஆதரவாளர்கள் என்று கருதி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு தூக்கியடிக்கப்பட்டு விட்டனர்.

ஆனால் உண்மையில் வேலுமணி, தங்கமணி, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் போன்றவர்களின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து, தேர்தலுக்காக வெளியேறியவர்கள் தற்போது மீண்டும் இந்த 4 மாவட்டத்துக்குள் செல்வாக்கான போலீஸ் நிலையங்களுக்கே வந்துள்ளனர் என்ற குறைபாடு காவல்துறையில் எழுந்துள்ளது. இதற்கு காரணம், அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் எங்கெங்கு பணியாற்றினார்கள் என்ற விபரங்களை எடுக்காமல் தற்போது எங்கு பணியாற்றி வருகின்றனர் என்ற விபரத்தை வைத்து மாறுதல் செய்ததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதோடு, டிஜிபியாக திரிபாதி இருந்தபோது, கோவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு டிஎஸ்பியிடம்தான் யாரை எங்கு போடலாம், யார் வேலுமணி உள்ளிட்ட மாஜி அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்களை மாற்றுவது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், அந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பியும் வேலுமணிக்கு வேண்டியவர்தான் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் மற்றும் சில நடுநிலையானவர்கள் என பிரித்து அறிக்கை கொடுத்தள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர்கள் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதில், தற்போது ஊத்துக்குளி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள மகேந்திரன், கடந்த 10 ஆண்டுகளாக தாராபுரம், மடத்துக்குளம், பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி மேற்கு ஆகிய காவல்நிலையங்களில் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாமல் செல்வாக்கான காவல்நிலைய பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் ஊத்துக்குளி, காரமடையில் பணியாற்றி வந்த பாலசுந்தரம், தற்போது மங்கலம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊத்துக்குளி, உடுமலையில் பணியாற்றி வந்த தவமணி, சிறுமுகை இன்ஸ்பெக்டராகவும், கோமங்கலம், பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி மேற்கு மாவட்டத்தில் பணியாற்றிய வைரம், மதுக்கரை இன்ஸ்பெக்டராகவும், மேட்டுப்பாளையும், திருப்பூர் சிட்டி, திருப்பூர் மத்திய காவல்நிலையத்தில் பணியாற்றிய சென்னகேசவன், திருப்பூர் சிட்டி ஊரக காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், அவினாசி மதுவிலக்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர் ஆகிய காவல்நிலையங்களில் பணியாற்றிய முரளி, அவிநாசி காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோவில்பாளையம், வடவள்ளியில் பணியாற்றிய தங்கம், தற்போது பெருந்துறை இன்ஸ்பெக்டராகவும், நம்பியூர், கருத்தம்பட்டி, குன்னத்தூர், சூலூர், கருமத்தப்பட்டி காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்.எம்.சண்முகம்,நம்பியூர் இன்ஸ்பெக்டராகவும், காமநாயக்கன் பாளையம், மூலனூர், பொள்ளாச்சி தாலுகாவில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணா, உடுமலைப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும், அவிநாசி மதுவிலக்கு கருமத்தம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய இடங்களில் பணியாற்றிய விநாயகம், பல்லடம் இன்ஸ்பெக்டராகவும், கோவையில் முக்கியமான காவல்நிலையங்களில் சட்டம் ஒழுங்கில் பணியாற்றிய ஜோதி, திருப்பூர் சிவில் சப்ளை சிஐடி இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு டவுன், வடவள்ளியில் பணியாற்றிய மணிவண்ணன், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டராகவும், பேரூர், வடவள்ளி, காங்கேயம் ஆகிய இடங்களில் பணியாற்றிய சுகவனம், பங்களாபுதூர் இன்ஸ்பெக்டராகவும், பல்லடம், தாராபுரத்தில் பணியாற்றிய சுப்புரத்தினம், மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி மேற்கு, மதுக்கரை, கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் பணியாற்றிய ஜெயக்குமார், காங்கேயம் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு, காங்கேயம், பங்களாபுதூர், தாராபுரம், கோபி ஆகிய இடங்களில் பணியாற்றிய மகாலிங்கம், பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அவிநாசி, காரமடை, பேரூர் ஆகிய இடங்களில் பணியாற்றிய சக்திவேல், உக்கடம் இன்ஸ்பெக்டராகவும், கோவில்பாளையம், பேரூர், மதுக்கரை ஆகிய இடங்களில் பணியாற்றிய ரமேஷ் கண்ணா பேரூர் மதுவிலக்குப் பிரிவுக்கும், கடந்த 10 ஆண்டுகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டுமே பணியாற்றி வந்த கனகசுந்தரம், கோவை எஸ்பி இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் நகரம் வடக்கு, திருப்பூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, சீலாம்பாளையம் ஆகிய இடங்களில் பணியாற்றிய கணேசன், திருப்பூர் நகர மதுவிலக்குப் பிரிவிலும், கோவை மாவட்டத்தில் மட்டுமே பணியாற்றி வந்த ரவி, கோவை நகர மத்தியக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், காமநாயக்கன் பாளையம் மற்றும் கோவை மாநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய தெய்வசிகாமணி, கோவை உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கிணத்துக்கடவு, நெகமம், பேரூர் மதுவிலக்கு, பொள்ளாச்சி கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பணியாற்றிய தங்கராஜ், பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தற்போது மதுக்கரை இன்ஸ்பெக்டராக உள்ள வைரம், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர். அவர் மூலம்தான் மேற்கு மண்டலத்துக்கு மாறுதல் வாங்கி வந்தார். தற்போது, அவர் கடந்த 10 ஆண்டுகளில் பணியாற்றிய பகுதியை ஒட்டிய பகுதியில்தான் தற்போதும் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் மீண்டும் மதுக்கரையை தக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் புதிதாக வந்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு, முன்னாள் டிஜிபி திரிபாதி செய்துள்ள குளறுபடியான உத்தரவுகளை மறு பரீசலனை செய்ய வேண்டும் என்று நேர்மையான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பணி நியமனங்களில் தெய்வசிகாமணி, கணேசன் ஆகிய இருவர் மட்டுமே மிகவும் நேர்மையானவர்கள். வேலுமணி உள்ளிட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான். மற்ற 22 இன்ஸ்பெக்டர்களும் அரசியல்வாதிகளால் மேற்கு மண்டலத்திலேயே சுற்றியிருந்தவர்கள், தற்போதும் அதே பகுதியில் பணியிடங்களை வாங்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

டிஜிபியாக திரிபாதி இருந்தபோது, கோவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு டிஎஸ்பியிடம்தான் யாரை எங்கு போடலாம், யார் வேலுமணி உள்ளிட்ட மாஜி அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். அவர்களை மாற்றுவது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Western Zone , West Zone, Inspector, Mission
× RELATED செப்டம்பர் 24ல் திமுக வாக்குச்சாவடி...