×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜில், பிளிஸ்கோவா

சின்சினாட்டி: வெஸ்டர்ன் அண்டு சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் கால்இறுதியில், 4ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில், பிரான்சின் பெனாய்ட்டை வீழ்த்தினார். இன்று காலை நடந்த 2வது கால் இறுதியில் முதல் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பப்லோ கரினோபுஸ்டாவை வென்றார். மற்றொரு கால் இறுதியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், 7-5, 6-3, 6-4 என கனடாவின் பெலிக்ஸ் ஆகரை வீழ்த்தினார். இன்று காலை நடந்த 4வது கால் இறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், 6-1, 6-3 என்ற செட் கணக்கில், நார்வேயின் காஸ்பர்ரூட்டை சாய்த்தார். அரையிறுதியில் மெட்வெடேவ்-ஆண்ட்ரி ருப்லெவ், சிட்சிபாஸ்-ஸ்வெரெவ் மோதுகின்றனர்.

மகளிர் ஒற்றையர் கால்இறுதியில், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிபார்டி 6-2, 6-4 என்ற செட் கணக்கில், செக்குடியரசின் பார்போரா க்ரெஜிகோவாவை வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என கெர்பர் கைப்பற்றினார். 2வது செட் 3-3 என சமனில் இருந்த நிலையில் கிவிடோவா வயிற்றுவலி காரணமாக வெளியேறினார். இதனால் கெர்பர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்று காலை நடந்த 3வது கால் இறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை 3-6, 2-6 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஜில் டெக்ய்மன் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால் இறுதியில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா- ஸ்பெயினின் பவுனா படோசா மோதினர். இதில் முதல் செட்டை பிளிஸ்கோவா 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் 2-0 என முன்னிலையில் இருந்த போது பவுனா காயம் காரணமாக பாதியில் வெளியேற பிளிஸ்கோவா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று இரவு முதல் அரையிறுதியில் ஆஷ்லி பார்டி-கெர்பர் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ஜில்-பிளிஸ்கோவா மோதுகின்றனர்.

Tags : Cincinnati Open Tennis ,Jill ,Bliskova , Cincinnati Open Tennis: Jill, Bliskova in the semifinals
× RELATED அமெரிக்க அதிபர் ஜோபிடன், அவரது மனைவி...