டி.20 உலக கோப்பை இந்த முறை எங்களுக்கு தான்: இங்கி. கேப்டன் மோர்கன் பேட்டி

லண்டன்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. கடைசியாக நடைபெற்ற 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிபோட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இங்கிலாந்து வீழ்ந்தது. இங்கிலாந்து வெற்றியை நெருங்கிய நிலையில், வெ.இண்டீசின் பிராத்வெயிட் கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசி வெற்றியை பறித்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ``எங்களது மிகப்பெரும் பலமே, நிலையான ஆட்டம் தான். கடந்த 2 வருடங்களாகவே ஒரே மாதிரி சிறப்பாக விளையாடுகிறோம். டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 1ல் தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என திறமைவாய்ந்த அணிகள் உள்ளன. எனவே அது எங்களுக்கு சற்று சவாலை கொடுக்கிறது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இங்கிலாந்து அணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகப்பெரியது. கோப்பைக்கான எங்களின் எதிர்பார்ப்பு நீண்ட வருடமாக நீடித்து வருகிறது. 2016ம் ஆண்டுவிட்ட ஆட்டத்தை இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் பிடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி கடந்த 2010ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>