×

புளியந்தோப்பு போலவே தரமற்று காணப்படும் ராமாபுரம் கட்டிடம்!: தொட்டாலே சிமெண்ட் உதிர்வதாக மக்கள் புகார்..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பை தொடர்ந்து ராமாபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அனைத்தும் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் சென்னை ராமாபுரம் வீட்டு வசதி குடியிருப்பில் வசிப்பவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கே.கே.நகர் கோட்டம் மூலமாக கடந்த 2019ம் ஆண்டு ராமாபுரம் பாரதிசாலையில் 78 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பயனாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு மக்கள் வசிக்க தொடங்கி 2 ஆண்டுகளே ஆகிறது. ஆனால் குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதாகவும், கட்டிடம் உறுதியில்லாமல் இருப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் முறையிட்டிருக்கிறார்கள்.

கட்டிடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்து பகுதிகளும் சிதலமடைந்திருக்கின்றன. இதனால் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருவதாகவும் கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குடியிருப்புவாசிகள் கோரிக்கைவிடுத்திருக்கிறார்கள்.


Tags : Ramapura building , Ramapuram building, cement, people
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...