×

தலைநகரில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!

டெல்லி: டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தீவிர மழை பெய்து வருகிறது. டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவுக்கு பின் டெல்லியில் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆசாத்பூர், சப்தர்ஜங், மூல்சந்த், மின்டோ பிரிட்ஜ் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

டெல்லியின் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. நள்ளிரவு 2.30 மணி அளவில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை 7 செ.மீ. அளவில் மழை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குளாகியுள்ளனர். தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே பாதுகாப்புடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து ஹரியானாவின் காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


Tags : Delhi , Heavy rains from midnight in various parts of the capital: Orange warning for Delhi!
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...