×

கூவம் ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைப்பு: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவில், ‘‘வானகரம் பள்ளிக்குப்பம் கூவம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து மீன் மார்க்கெட் அமைப்பதற்காக சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும், அந்த பகுதியில் கட்டிட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டுள்ளது.  இது கூவம் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதற்கு தடையாக உள்ளது. ஏற்கனவே கூவம் ஆறு மாசு பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் இருந்து கழிவு நீர் கூவம் ஆற்றில் விடப்படுகிறது.

எனவே, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை இடிக்க உத்தரவிட வேண்டும். மேலும் கழிவுநீர் கூவம் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு செய்ய திருவள்ளூர் கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் அந்தஸ்துக்கு குறையாத மூத்த அதிகாரி ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்படுகிறது.

இந்தக்குழு கூவம் ஆற்றை ஆக்கிரமித்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளதா, கூவம் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் வகையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா? சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் கூவம் ஆற்றுக்குள் விடப்படுகிறதா என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து  ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Cowam River, Board of Officers, Southern National Green Tribunal
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...