×

குன்றத்தூர் முருகன் கோயிலில் பரபரப்பு திருமண கோஷ்டிகள் திடீர் அடிதடி: போலீசார் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து, ஆவணி தொடங்கியதால் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் முதல் முகூர்த்த நாள் என்பதால் குன்றத்தூர் முருகன் கோயிலில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருமண கோஷ்டியினர் ஒரே நேரத்தில் ஒன்று கூடினர். இதில் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 15 நிமிடங்களில் ஒரே இடத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கோஷ்டியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது, நல்ல நேரம் முடிவதற்குள் யார் முதலில் கோயில் உள்ளே செல்வது என்பது தொடர்பாக, இரு திருமண கோஷ்டியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்  கைகலப்பாக மாறியது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக கைகளால் தாக்கிக் கொண்டனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய  வந்திருந்த மற்ற பக்தர்கள், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குன்றத்தூர் போலீசார், கைகலப்பில் ஈடுபட்ட திருமண கோஷ்டியினரை சமாதானப்படுத்தி எச்சரித்து அனுப்பினர். இரண்டு திருமண கோஷ்டியினர் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kunrathur Murugan Temple , Kunrathur Murugan Temple, marriage, sudden commotion, police alert
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில்...