கொரோனா தொற்று பரவல் 1% குறைவு: மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்கில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளது. தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு என 17 மாவட்டங்களில் 1 விழுக்காடுக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் விகிதம் 1 விழுக்காடுக்கு கீழே உள்ள மாவட்டங்களில் பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்வதற்கும், 1 விழுக்காடுக்கு மேல் உள்ள மாவட்டங்களில் 1 விழுக்காடுக்கு குறைவாக கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மக்கள் வரத்து குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மலேரியா இல்லாத மாநிலம்

சர்வதேச கொசு ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகங்களுக்கு  ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘மலேரியா பாதிப்பு சென்னை  மற்றும் ராமநாதபுரத்தில் மட்டுமே காணப்படுகிறது. மலேரியா இல்லாத மாநிலமாக  தமிழகத்தை மாற்றுவதற்கான இலக்குடன் செயல்பட வேண்டும். மலேரியாவைப் பரப்பும்  அனாபிலஸ் என்ற வகை கொசுக்களையும், டெங்கு, சிக்குன் குனியா, ஜிகா வைரஸ்  பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களையும், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், யானைக் கால்  வியாதியைப் பரப்பும் க்யூலக்ஸ் வகை கொசுக்களையும் ஒழிப்பது மிகவும்  முக்கியமானது. தேங்கியிருக்கும் நல்ல நீர் மற்றும் கழிவு நீர் ஆகியவற்றை  உடனே அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும். இதுதொடர்பான புரிதலை  பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதுடன் தேவைப்பட்டால் உரிய விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Related Stories:

>