×

வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா வாட்ஸ் அப்பில் கதறி அழுதபடி பள்ளி உரிமையாளர்கள் தற்கொலை: ரூ.2 கோடி கடன் பிரச்னையால் விரக்தி

திருமலை: ஆந்திராவில் ரூ.2 கோடி கடன் பிரச்னையால் பள்ளி நிர்வாக தம்பதி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ரோகிணி. இவர்கள் அதே பகுதியில் ‘லைப் எனர்ஜீ’ என்ற பெயரில் ஆங்கில வழி பள்ளியை நடத்தினர். இதில், அதிக மாணவர்கள் படித்து வந்தனர். இதனால், சுப்பிரமணியம் தம்பதியினர் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். கடந்தாண்டு ஜனவரியில் பள்ளியை விரிவுப்படுத்த, சிலரிடம் ரூ.2 கோடி வரை கடன் வாங்கினர். கட்டிட பணிகள் நடந்த நிலையில், கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளிகள் மூடப்பட்டது. ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டது.

தொடக்கத்தில் பெற்றோர்கள் ஓரளவு கல்விக் கட்டணம் செலுத்தினர். பின்னர், அதுவும் கிடைக்கவில்லை. இதனால், வட்டி கூட செலுத்த முடியாமல் இருவரும் அவதிப்பட்டனர். கடன் கொடுத்தவர்கள் தினமும் கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால் வேதனை அடைந்து, தற்கொலை முடிவு எடுத்தனர். கடந்த 16ம் தேதி இருவரும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சென்று நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தனர். பின்னர், காரில் அமர்ந்தபடி இருவரும் வீடியோ பதிவு செய்தனர். அதில், கதறி அழுதபடி இருவரும், ‘கடன் நெருக்கடியால் எங்களால் வாழ முடியவில்லை. இதனால், எங்களுக்கு தற்கொலை முடிவு தவிர வேறு வழியில்லை.

அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள்,’ என பேசினர். இதை தங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினர். அதிர்ச்சியடைந்த அவர்கள்,  காரில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவர்களை மீட்டு, கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Corona, whats up, school owners commit suicide, debt problem
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு