×

சிறிது காலம் ஆதிக்கம் செலுத்தினாலும் தீவிரவாதம் நிரந்தரமல்ல: பிரதமர் பேச்சு

சோம்நாத்: ‘தீவிரவாதத்தின் மூலம் பேரரசை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை கொண்ட அழிவு சக்திகள் சிறிது காலம் ஆதிக்கம் செலுத்தினாலும், அவர்களின் இருப்பு நிரந்தரமல்ல,’ என பிரதமர் கூறி உள்ளார். குஜராத் மாநிலம், கிர்சோம்நாத்தில் ரூ.3.5 கோடியில் பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, ரூ.30 கோடியில் சிவ பார்வதி கோயில் கட்டுவது உள்ளிட்ட ரூ.83 கோடிக்கான 4 திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பொய்யால் உண்மையை வீழ்த்த முடியாது, உண்மையை ஒருபோதும் தீவிரவாதத்தின் காலடியில் நசுக்க முடியாது என்ற செய்தியை ஒட்டுமொத்த உலகுக்கும் சோம்நாத் கோயில் உணர்த்தியிருக்கிறது. கடந்த பல நூற்றாண்டுகளில் பல முறை இந்த கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதன் அடையாளத்தை அழிக்க பல முயற்சிகள் நடந்துள்ளன. அனைத்தையும் மீறி, உடைக்கப்படும் ஒவ்வொரு முறையும் புதுப்பொலிவுடன் கோயில் எழுச்சி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த உலகிற்குமான உண்மை மற்றும் உத்தரவாதத்தின் அடையாளம்  சோம்நாத் கோயில்.  எனவே, பிறரை அழிக்கும் தீவிரவாதத்தின் மூலம் பேரரசை கட்டியெழுப்ப முடியும் என்ற கொள்கையை கொண்ட அழிவு சக்திகள் சில சமயம் ஆதிக்கம் செலுத்தலாம், ஆனால், அவர்களின் இருப்பு நிரந்தரமல்ல. அவர்களால் மனிதகுலத்தை என்றென்றும் ஒடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : PM , Dominance, extremism, PM speech
× RELATED பிரதமர் பதவியில் இருந்து கொண்டு...