உலக டேபிள் டென்னிஸ் சத்யன், மனிகா சாம்பியன்

புடாபெஸ்ட்: உலக டேபிள் டென்னிஸ் போட்டியின்  கலப்பு இரட்டையர் பிரிவில்  இந்திய இணை  சத்யன், மனிகா ஆகியோர்  சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர். உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியின்  தலைநகர புடாபெஸ்டில்  நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரில்பங்கேற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஆடவர் ஒற்றையர்,  மகளிர் இரட்டையர், ஆடவர் இரட்டையர் பிரிவுகளில்  முதல், 2வது சுற்றுகளில் தோற்று வெளியேறினர். அதேநேரத்தில் மகளிர் ஒற்றையர்  பிரிவில்  இந்திய வீராங்கனைகளில்  மனிகா பத்ரா அரையிறுதி வரையிலும், ஸ்ரீஜா அகுலா காலிறுதி வரையிலும்  முன்னேறி அசத்தினர்.

அவர்களும் தோற்று வெளியேறியது இந்திய டேபிள் டென்னிஸ் ரசிகர்களுக்கு  ஏமாற்றத்தை அளித்தது. ஆனால்  கலப்பு இரட்டையர் பிரிவில்  தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்,  மனிகா பத்ரா இணை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி ஆறுதல் அளித்தது. தொடர்ந்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஹங்கேரி இணை  எக்செகி நன்டோர்,  டோரா மடராசஸ் ஆகியோருடன் இந்திய இணை மோதியது.

முதல் செட்டை இந்திய  இணை 11-9 என்ற புள்ளி கணக்கிலும், 2வது செட்டை ஹங்கேரி இணை 11-9 என்ற புள்ளி கணக்கிலும் கைப்பற்றின.  அடுத்த 2 செட்களிலும் பொறுப்புடன் விளையாடிய இந்திய இணை அவற்றை 12-10, 11-6  என்ற  புள்ளி கணக்கில் வசப்படுத்தியது. அதனால்   இறுதி ஆட்டத்தில்  3-1 என்ற செட் கணக்கில் வென்ற சத்யன், மனிகா இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Stories: