×

5 ஆண்டு கழித்து மருமகள் கொடுத்த புகாரில் ஒடிசா எம்பி, மனைவி, மகன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

போபால்: ஒடிசாவை சேர்ந்த எம்பி பர்த்ருஹரி மஹ்தாப், அவரது மனைவி, மகன் மீது அவரது மருமகள் கொடுத்த புகாரின் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரின் மகனுக்கும், மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த பெண்ணுக்கும்  கடந்த 2016ல் திருமணம் நடந்தது. ஆனால், ஒரு வாரம் மட்டுமே தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், எம்பியின் மருமகள் போபால் மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர், மாமியார், மாமனார் (எம்பி) ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அதையடுத்து, ஐபிசி மற்றும் வரதட்சணை தடை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

இதுகுறித்து பர்த்ருஹரி மஹ்தாப் கூறுகையில், ‘என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து காவல்துறை அல்லது நீதிமன்றத்திடம் இருந்து எவ்வித அறிவிப்பும் வரவில்லை. என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் கூறப்படும் குற்றச்சாட்டு என்ன என்பது எனக்குத் தெரியாது. தற்போது வழக்கு பதியப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்திகள் யாவும், ஊடகங்கள் மூலமே எனக்குத் தெரிய வந்தது. என் மகன், மருமகள் ஆகியோர் ஒருவாரம் மட்டுமே தம்பதிகளாக இருந்தனர். சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததால், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டு, அவ்வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது. திருமணமான ஐந்து வருடங்களுக்குப் பிறகு வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தது ஏன் என்பது தெரியவில்லை. விவாகரத்து வழக்கு விசாரணையில் இருப்பதால், இப்போது எதுவும் நான் கூறமுடியாது. எனக்கு எதிராக அரசியல் சதி இருக்கிறதா? என்று கேட்கின்றனர். அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை’ என்றார்.

Tags : Dowry ,Odisha , Dowry abuse case against Odisha MP, wife, son in complaint filed by daughter-in-law 5 years later
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்