×

மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஓபிசி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்: ஒன்றிய அரசிதழிலும் வெளியீடு..!

புதுடெல்லி: இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரிப்பதற்கு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என்று கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணையின் போது, மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தபோதிலும், மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தொடரில் பிற அலுவல்களை புறக்கணித்தாலும், இந்த விவகாரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து எதிர்க்கட்சிகள் ஒருமனதாக இதற்கான மசோதா நிறைவேற உதவின. தொடர்ந்து, இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த அரசியல் சாசன திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், ஓபிசி பட்டியலை நிர்ணயம் செய்யும் உரிமை மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 127வது சட்டத்திருத்தம் ஒன்றிய அரசிதழில் வெளியிடப்பட்டது.


Tags : President ,OBC , President approves OBC reservation law empowering state governments: Publication in Union Gazette ..!
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...