×

மத்திய மண்டலத்தில் பாலங்களின் பராமரிப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்

திருச்சி: மத்திய மண்டலத்தில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் பாலங்களின் பராமரிப்பு பணியை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் பாலங்களை பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி மாநிலம் முழுவதும் பாலங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் அனைத்து கேட்ட பொறியாளர்களுக்கு சுற்றிக்கை அனுப்பி இருந்தார்.

இந்த சுற்றிக்கையில், நீர் வழிப்பாதைகளில் உள்ள செடி, கொடி, தாவரங்கள் மற்றும் மணல் திட்டுகளை அகற்ற வேண்டும். பாலத்தின் கீழ் பகுதியில் நீர் வழிப்பாதையில் உள்ள தடைகள் மற்றும் அடைப்புகள் நீக்க நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலம்கட்டுமான பகுதியில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும். பாலத்தின் கைப்பிடி சுவர், மேல்தளம் நடைபாதை மற்றும் மூடு பலகைகள் ஆகிவற்றில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும். பாலங்களில் மேல் தளங்களில் உள்ள இணைப்புகள் மற்றும் பியரிங்குகளை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். தரைப்பாலங்களில் வெள்ள நீர் அளவுகோல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறுகிய பாலங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். வழிகாட்டு தூண்களை சரி செய்ய வேண்டும். மண் அரிப்பை சரி செய்ய வேண்டும். நீர் கசிவை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். நீர் வழிப் ேபாக்கின் திசைகாட்டும் குறி தெளிவாக எழுத வேண்டும் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது.

இதன்படி, திருச்சி வட்டத்தில் உள்ள திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கோட்ட பொறியாளர்கள் கண்காணிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி வட்டாரத்தில் மொத்தம் 400க்கு மேற்பட்ட சிறு பாலங்கள் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக வாரம் ஒரு முறை ஆய்வு கூட்டம் நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Central Zone , Maintenance of bridges in the Central Zone Instruction to complete by the end of this month
× RELATED பேராவூரணியில் நீதிபதி முன்னிலையில்...