×

புதிய அங்கன்வாடி கட்ட இடையூறு திருமங்கலம் தாலுகா ஆபீசை கிராமமக்கள் முற்றுகை

திருமங்கலம்: புதிய அங்கன்வாடி கட்ட தனிநபர் தொடர்ந்து இடையூறு செய்வதாக கூறி பஞ்சாயத்து தலைவர் தலைமையில் கிராமமக்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருமங்கலம் அருகேயுள்ள விடத்தகுளம் ஊராட்சிக்குட்பட்டது எட்டுநாழிபுதூர். இங்குள்ள அங்கன்வாடியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். வாடகை கட்டிடத்தில், மிகவும் குறுகலான இடத்தில் இயங்கும் அங்கன்வாடியில், குழந்தைகள் பாதுகாப்பு பாதிக்கப்படும் நிலை உருவானது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக உறுதி வேலைவாயப்பு திட்ட நிதி ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்தில் புதிய அங்கன்வாடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எட்டுநாழிபுதூரில் அரசு புறம்போக்கு இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

இதற்கிடையே புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் இடத்தில் குடியிருந்தும் வரும் ஒரு குடும்பத்தினர் அந்த இடத்தை தாங்கள் இதுவரையில் பயன்படுத்தி வந்ததாக கூறி இடையூறுகள் செய்து வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் விடத்தகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி சந்திரன் தலைமையில் திரண்டு நேற்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். தொடர்ந்து தாசில்தார் ஆனந்தகிருஷ்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். திருமங்கலம் பிடிஓ மற்றும் அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார்.

இதுகுறித்து பஞ்சாயத்துதலைவர் ராணி சந்திரனிடம் கேட்ட போது, ‘அங்கன்வாடி கட்டப்படும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். 1 ஏக்கர் 80 சென்ட் உள்ள அந்த இடத்தில் ஏற்கனவே சிமெண்ட் களம், குடிநீர் தொட்டி, ஆர்ஓ பிளாண்ட், போர்வெல் அமைத்துள்ளோம். தற்போது இதனருகே அங்கன்வாடி அமைக்க கட்டிடம் கட்டும் போது தனிநபர் இடையூறு செய்து பணிகளை தடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் கடந்த சில தினங்களாக பணிகள் நடைபெறவில்லை’ என்றார்.விடத்தகுளம் ஊராட்சி 5வது வார்டுஉறுப்பினர் பால்பாண்டி கூறுகையில், ‘அங்கன்வாடி அமைப்பதால் தற்போது ஊர் பொது மயானத்திற்கு செல்லும் பாதையை முட்கள் போட்டு ஒரு குடும்பத்தை சேர்ந்த தனிநபர் தடைசெய்துள்ளனர். இதனால் கிராமத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

Tags : Thirumangalam taluka ,Anganwadi , New Anganwadi Building Interruption Thirumangalam Taluka Office The siege of the villagers
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...