×

மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கத்தில் பயங்கரம் ரயில் நிலையத்தில் வாலிபர் கொலை: பெட்ரோல் திருடர்கள் வெறிச்செயல்; இருவர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நிறுத்திய மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடியதை தட்டிக் கேட்ட கட்டிடத் தொழிலாளி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கஞ்சா போதை ஆசாமிகள் இருவரைபோலீசார் கைது செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. இதன்  அருகே வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில் மார்க்கமாக வேலைக்கு செல்லும் பலரும் தங்களது வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதி ஜோசப் தெருவைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மகன் ராஜேஷ் (24).

இவருக்கு திருமணமாகி 6 மாதத்தில் குழந்தையும் உள்ளது. இவர் நேற்றுமுன்தினம் காலை அப்பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்னை கத்திவாக்கம் பகுதியில் நடைபெறும் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். பின்னர், வேலை முடிந்து திரும்பியவர் இரவு 9 மணி அளவில் ரயிலில் வந்து இறங்கியவர் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றுள்ளார்.  அப்போது, அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இரண்டு மர்ம நபர்கள் திருடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த  ராஜேஷ் அவர்களை திட்டி உள்ளார். இதனை தொடர்ந்து, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதில், கஞ்சா போதையில் இருந்த இரண்டு மர்ம நபர்களும்  மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரி வெட்டியுள்ளனர். அப்போது, அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த ரயில் பயணிகள் சம்பவ இடத்திற்கு  ஓடிவரவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து  வந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில், மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் அப்பு (எ) ராஜேஷ் (24), நந்தியம்பாக்கம் கோபி என்பவரின் மகன் தமிழ் (எ) தமிழரசன் (24) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ராஜேஷை வெட்டிய அப்பு, தமிழரசன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இருவரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Nandiyambakkam railway station ,Minjur , Railway station, youth murder, petrol thieves
× RELATED மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவர்களிடையே...