×

பொதுமக்கள் புகார் மீது உரிய நடவடிக்கை: செங்கை எஸ்பி விஜயகுமார் உறுதி

கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் நந்திவரம் கிராமம் திரவுபதி அம்மன் கோயில் திடலில் நேற்று நடந்தது. கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார். வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன் முன்னிலை வகித்தார். எஸ்பி விஜயகுமார் கலந்து கொண்டார்.  அப்போது, கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக காவலர் பற்றாக்குறை உள்ளது. கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை ஓட்டியபடி டாஸ்மாக் கடை இயங்குகிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, எஸ்பி விஜயகுமார் பேசியதாவது.

கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், தற்போது கூடுதலாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் புதிதாக ஆட்கள் திரிந்தாலோ, வெளியூரில் இருந்து யாராவது தங்கினாலும், ரவுடி மாமூல் கேட்டாலும் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்க விளையாட்டு துறைக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.

சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை காக்க, காவல்துறையுடன்,  பொதுமக்கள் பணியாற்றவேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகள், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். முன்னதாக எஸ்பி,  கிராம விழிப்புணர்வு குழு  அலுவலர்களாக ஜனகராஜன், அன்பரசு ஆகியோரை நியமித்து, அவர்களது செல்போன் நம்பர்களை பொதுமக்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், பேரூர் செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் கே.பி.ஜார்ஜ்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Sgai SP Vijaykumar , Public, Complaint, Action, SP Vijayakumar
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...