பொதுப்பணித் துறையின் தர சான்றிதழ் பெறாமல் தரமற்ற எம் சாண்ட் மணல் விற்பனை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை

காஞ்சிபுரம்: தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் 1000க்கும் மேற்பட்ட எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில், எம் சாண்ட்டின் தரத்தை அரசு நிர்ணயம் செய்து அதற்கான தரச் சான்றிதழை பொதுப்பணித் துறை (கட்டிடம்) வழங்குகிறது. ஆனால், இதில் பெரும்பாலான நிறுவனங்கள் தரமான எம் சாண்ட் விற்பனை செய்யவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 358 நிறுவனங்களுக்கு எம் சாண்ட் தரச் சான்றிதழ், பொதுப்பணித் துறையினரால் வழங்கப்பட்டது. மேலும் மற்ற நிறுவனங்களும் தரச் சான்று பெற அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மணலுக்கு மாற்றாக பாறைகளை உடைத்து, சலித்து மணல் பதத்திற்கு ஏற்ப ‘எம்.சாண்ட்’ தயாரிக்கப்படுகிறது. தற்போது இதனை கட்டுமான பணிகளுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். சில குவாரிகள் கடினத்தன்மை இல்லாத பாறைகளை உடைத்து பாறை துாசிகளை கலந்து தரமில்லாத ‘எம்.சாண்ட்’ விற்பனை செய்வதாகவும், அதனை ஒன்றரை யூனிட் ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுப்பணித்துறை மூலம் தரச்சான்று பெற்று செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 456 எம்.சாண்ட் ஆலைகள் செயல்படுகின்றன. இதில் அரசு உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25, செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 என 50 நிறுவனங்கள் மட்டுமே பொதுப்பணித்துறையின் தகுதி சான்று பெற்றுள்ளன. மற்ற கல் அரவை ஆலைகள் பொதுப்பணித்துறை தகுதி சான்று இதவரை பெறாமல் இயங்கி, தரமில்லாத எம்.சாண்ட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

பொதுப்பணித் துறையின் அனுமதி பெறாமல் இயங்கும் பெரும்பாலான எம் சாண்ட் செயற்கை மணலில் கிரஷர் டஸ்ட் அதிகளவு கலந்து இருப்பதாக கூறப்படுகிறது இந்த செயற்கை மணலில் 75 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான அளவு கொண்ட கிரஷர் டஸ்ட் துகள் கலந்திருப்பதால், அதன் வலிமையை பாதிக்கக்கூடும். அதை பயன்படுத்தி பூச்சு வேலைகள் உள்பட இதர வேலைகளை செய்யும் பட்சத்தில் வலுவற்ற கட்டமைப்பு உருவாகலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயற்கை மணலின் தர நிர்ணயத்தை ஆய்வுசெய்து தரமான எம் சாண்ட் கொண்ட மணல் மூலம் வலுவான கட்டிடங்களை கட்டுவதற்கு அரசு வழிவகுக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பெரும் ஆபரத்து ஏற்படும் முன், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>