×

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க உதவிய கூடலூர் அதிமுக பிரமுகர்கள்: போலீஸ் பிடியில் சிக்குகின்றனர்

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு உதவிய கூடலூர் பகுதியை சேர்ந்த இரு முக்கிய அதிமுக நிர்வாகிகள் பெயர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு ஒரு கொள்ளை கும்பல் நுழைந்தது. அந்த கும்பல், எஸ்டேட் காவலுக்கு இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவிற்குள் புகுந்தது. அங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த கொள்ளைக் கும்பல், 2017 ஏப்ரல் 24ம் தேதி அதிகாலை கூடலூர் வழியாக தப்பி சென்றுள்ளது.
அப்போது, கூடலூரில் போலீசாரின் வாகன சோதனையின் போது 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்கள், தாங்கள் சுற்றுலா பயணிகள் எனக்கூறியும் போலீசார் விடவில்லை. அவர்கள் எடுத்து வந்த வாகனத்தில் போதுமான ஆவணங்கள் இல்லாத நிலையில், அந்த வாகனத்தை பிடித்து வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த கொள்ளை கும்பலை விடுவிக்குமாறு கூடலூர் பகுதியை சேர்ந்த அதிமுகவில் முக்கிய பதவி வகிக்கும் சகோதரர்கள் இருவர் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த கொள்ளை கும்பல் திருடிச் சென்ற சில பொருட்களை, அந்த அதிமுக நிர்வாகிகளுக்கு பரிசாக அளித்துள்ளதாகவும் தெரிகிறது. அந்த பரிசு பொருட்களை சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி சயானிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, தாங்கள் கொள்ளையடித்து சென்ற போது, கூட்டாளிகளை கூடலூர் போலீசாரிடம் இருந்து விடுவிக்க கூடலூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இருவர் உதவி செய்ததாக கூறியுள்ளார். மேலும், அவர்களுக்கும் இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கும் சம்பந்தம் உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, கொடநாடு வழக்கில் கூடலூரை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் இருவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Cuddalore ,AIADMK ,Kodanadu , Kodanadu murder case, criminals, AIADMK leader
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...