சென்னை புளியந்தோப்பை போலவே பெரம்பலூரில் தரமின்றி கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்: பயனாளிகள் குமுறல்

பெரம்பலூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள் தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த வீடுகளை தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்பட்டது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், உடந்தையாக இருந்த துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னையை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்திலும் இதுபோன்ற புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் ஊராட்சி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 2019ம் ஆண்டு ரூ.41 கோடி ஒதுக்கீட்டில் 504 வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கின. 3 கட்டங்களாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் முடிந்த கட்டிடங்கள் கடந்தாண்டு கொரோனா நோயாளிகளுக்கான சித்தா முறையில் சிகிச்சை அளிக்கும் வார்டாகவும், கண்காணிப்பு மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கொரோனா தொற்று பெரம்பலூர் மாவட்டத்தில் படிப்படியாக குறைந்த நிலையில் குடியிருக்க தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 504 பேர்களில், பயனாளிகளுக்கான பங்களிப்பு தொகையான ரூ.1.64லட்சத்தை முழுமையாக செலுத்திய 375 பயனாளிகளுக்கு அவரவருக்கான குடியிருப்புகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக 2021 ஜனவரி 8ம்தேதி குடிசை மாற்று வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது அதில் 120 குடும்பத்தினரே குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகள் பயனற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறும் குடியிருப்பவர்கள், தொட்டாலே சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருவதாகவும், மழை நேரங்களில் வீடுகளில் இருப்பதற்கே அச்சமாக உள்ளது.

சென்னை புளியந்தோப்பை போன்று பெரம்பலூரிலும் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி கோட்ட குடிசை மாற்றுவாரிய மேற்பார்வை பொறியாளர் வசந்தகுமார், நிர்வாக பொறியாளர் அழகு பொன்னையா ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட குடியிருப்புவாசிகள், வீட்டில் உள்ள குறைகளை அடுக்கடுக்காக கூறினர்.

இதையடுத்து அதிகாரிகள், படிகள் சிதிலமடைந்து கொட்டி கிடந்தது, பக்க சுவர்களில் விரிசலோடு கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கிடந்தது, தரமற்ற குடிநீர் குழாய்களில் தண்ணீர் வெளியேறி பாசான் பிடித்து கிடப்பது போன்றவற்றை செல்போன்களில் படம் எடுத்து கொண்டனர். புகார் கூறப்பட்ட வீடுகள், பிளாக்குகளை பயனாளிகள் பெயரோடு குறிப்பெடுத்து கொண்டனர். மீண்டும் கட்டுமான பணிகள் குறித்து குழுவாக வந்து மறுஆய்வு செய்வதாக தெரிவித்து விட்டு சென்றனர்.

Related Stories: